கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்ட மெட்டறை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (50).
கூலித் தொழிலாளியான இவர், வீட்டு கடன் பெறுவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையில் கடன் பெறுவதற்கு தேவையான அடங்கல் சான்று பெறுவதற்காக, கருக்கனள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி என்பவர், சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூலித்தொழிலாளி முனியப்பா, கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதியிடம் 250 ரூபாய் லஞ்சமாக கொடுத்துவிட்டு அடங்கல் சான்று பெறுகிறார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி, கூடுதலாக பணம் கேட்டு வற்புறுத்துகிறார்.
மேலும், கூலித் தொழிலாளியிடம் பெற்ற 250 ரூபாய் லஞ்ச தொகையை, தனது உதவியாளருடன் பங்கிட்டுக் கொள்கிறார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
கூலித் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே நிலவுகிறது.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரனை ஈடிவி பாரத் சார்பில் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அழைப்பை ஏற்கவில்லை.