நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இன்று ஒருவழியாக இந்தப்படம் அறிவித்தபடி திரைக்கு வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தைக் காண திரையரங்குகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இதனிடையே கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.
மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த அதிவிரைவுப் படை காவல் துறையினர் விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 37 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஓரிரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில்,
இரவு சுமார் 10 மணியளவில் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று காலை திரையிடப்பட்டன.