கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னண்ணா (62). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்துவந்துள்ளது. நிலப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று சானமாவு தபால் நிலையம் அருகில் சின்னண்ணா, அவரது மனைவி நாகம்மா, அவரது மகன் ஆகியோர் இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது பிரகாஷ் அருகிலிருந்த மெக்கானிக் கடையில் பழைய இரும்பு ராடை எடுத்து சின்னண்ணாவைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷை சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையானது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது வழக்கின் இறுதி தீர்ப்பு விசாரணையில் நீதிபதி, பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தைக் கட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை