கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அடுத்த கூரம்பட்டி தேனேடை நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் கூழ் வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முனியம்மாள் (30) என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஜூன் 11ஆம் தேதி கூழ் வியாபாரியான ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளது. கொலை குறித்து ராஜேந்திரனின் முதல் மனைவி, மகன் அர்ஜுனன் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கூலிப்படை அமைத்து கொலை
விசாரணையில் மூன்றாவது மனைவி முனியம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டத்தையடுத்து முனியம்மாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவலர்களின் தீவிர விசாரணையில் கூலிப்படை கொண்டு கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முனியம்மாவுக்கும், குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கூழ் வியாபாரி ராஜேந்திரன் தன் மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்துள்ளார். இதனையடுத்து, ராஜேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவுசெய்து குமாரிடம் கூறியுள்ளார்.
தலைமறைவான கூலிப்படை
இந்நிலையில் 11ஆம் தேதி கூலிப்படையை ஏவி விட்டு ராஜேந்திரனை கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கள்ளக்காதலன் குமார், முனியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஆறு பேரை காவலர்கள் கைதுசெய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த இருவரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கைதுசெய்து அழைத்து சென்றனர். அப்போது, கல்குட்டை அருகே வடிவேல்(கூலிப்படை) வண்டியை நிறுத்தும்படி கூறி சிறுநீர் கழிப்பதாக தெரிவித்துள்ளார்.
கை முறிவு - சிறையில் அடைப்பு
அப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவலர்களிடமிருந்து அவர் தப்பியோடியுள்ளார். அப்போது ஓடிய வேகத்தில் அவர் கல் தடுக்கி கீழே விழுந்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் அவரைப் பிடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து, கையில் கட்டுப்போட்டு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.