கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி அருகே இரண்டு பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா நோய்த்தொற்று உள்ளதாக மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதியில் இருந்து 40 நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணகிரியில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒரே பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதையடுத்து மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு, தற்போது கரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த முதியவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சேலம் மாவட்டம், சோதனைச் சாவடியில் அவர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பின்னர் அந்த நபர் சேலம் மாவட்டம் கரோனா நோயாளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தற்போது மாவட்டத்தின் உட்பகுதியான சூளகிரியில் எந்த நேரடி அறிகுறியும் இல்லாமல் கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமாகக் சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாக தகவல் தெரிவித்துள்ளது.