கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மை இன ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், துணைத் தலைவர் ஜவஹர் அலி, உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 28) நடைபெற்றது.
இதில் ஜான் மகேந்திரன் பேசுகையில், “சிறுபான்மையின மக்களிடையே உள்ள குறைகளைக் கேட்டறிந்து அவற்றை மனுக்களாகப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் சிறுபான்மை இன மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்காக வழங்கும் கடனுதவி, மானியங்கள், உபகரணங்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் போன்றவற்றை அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கொண்டுசேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறுபான்மை இன மக்களுக்கு வழங்கிவருகிறது. குறிப்பாக உலமாக்களுக்கு 1500 ரூபாய் என்னும் ஓய்வூதியத்தை மூன்றாயிரமாக உயர்த்தியுள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும்போது தங்கிச் செல்வதற்காக சென்னையில் விடுதி கட்ட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தேவாலயங்கள், மசூதிகள் சீரமைப்பு மேற்கொள்ள மூன்று கோடியாக இருந்த தொகை ஐந்து கோடி ரூபாயாக உயர்த்தியது, கரோனா கால உதவித்தொகை வழங்கியது போன்ற பல உதாரணங்களைக் கூறலாம்.
உரிய பயனாளிகள் அரசின் திட்டங்களைப் பெற்று பயன் அடைவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 90 பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது உறுப்பினர், அரசு செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.