உலகளவில் கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துவருகிறது. அந்த வைரஸ், இந்தியாவிலும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 35 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அச்சிட்ட 12ஆம் வகுப்புக்கான நுண்ணுயிரியல் பாடப்புத்தகத்தில் கரோனா வைரஸ் என்ற வார்த்தைக்குப் பதிலாக, கார்னியா வைரஸ் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புத்தகம் மாணவர்களுக்கு விநியோகமும் செய்யப்பட்டுவிட்டது.
கார்னியா என்பது கருவிழி படலத்திற்குத் தொடர்புடையதாகும். உலகையே உலுக்கிவரும் ஒரு சொல்லைக்கூட சரியாக மொழிபெயர்க்காதது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்துவிட்டதாக கல்வியாலர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அறிவியல் அடிப்படை அறிவு மற்றும் கலைச் சொற்களைக் கையாளும் திறனைக் கொண்டிருப்பவர்களை வைத்து அறிவியல் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்காமல், அறிவியலின் ஒரு சொல்லைக்கூட தெரியாதவர்களை வைத்து மொழிபெயர்த்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நுண்ணுயிரியியல் பாட நூல் எழுதும் குழு ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலினா ரூபியிடம் ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தத் தவறு தொடர்பான தகவல் ஏற்கனவே எங்களது கவனத்திற்கு வந்தது.
மேற்படி இதனை எங்கள் பாடநூல் எழுதும் குழு மற்றும் மொழிபெயர்ப்பாளர் குழுவிடம் தெரியப்படுத்தி தகுந்த சுற்றறிக்கை அனுப்பி இந்த நுண்ணுயிரியல் பாடத்திலுள்ள மருத்துவ வைராலஜி பிரிவை எழுதிக்கொடுத்த ஆசிரியரை கலந்தாய்வு செய்து சரியான முறையில் மொழிபெயர்த்து ஏற்கனவே நாங்கள் மாணவர்களுக்கு அனுப்பி இருந்தோம்.
அதன்படி இந்தத் தகவல் ஏற்கனவே எங்களால் திருத்தப்பட்டுவிட்டது. மேலும் வருகின்ற கல்வி ஆண்டில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக அச்சிட்டு வழங்கும் பொழுது அனைத்து தவறுகளையும் நீக்கி மாணவர்களுக்கு பாட நூல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பசியால் வாடிய குடும்பத்தை காப்பாற்றிய ஈடிவி பாரத்!