கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பட்டியலின மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை, அவரது காதலர் கடத்தி சென்று ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், அப்பெண் சடலமாக இன்று (ஜன.28) மீட்கப்பட்டார். இந்நிலையில், அப்பெண்ணைக் காதலிப்பதாக ஏமாற்றி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் விசிகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர், ஓசூரிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் முதுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்(24) என்ற இளைஞரும் அப்பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை ஸ்ரீதர், தனது காதலியின் தந்தையிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு 'உன் மகளைக் கடத்திவிட்டோம். ரூ.10 லட்சம் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்பேன்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இன்று (ஜன.28) காலை, இராமன் தொட்டி என்ற வனப்பகுதியில் கழுத்து நெரித்து அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். வங்கிக்குச் சென்ற இளம்பெண் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவலரின் விசாரணையில், நேற்று மாலை காதலியை வெளியில் செல்வோம் என அழைத்துச் சென்ற ஸ்ரீதர், இராமன் தொட்டி வனப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே, அந்நபர் அப்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரிழந்த பட்டியலின இளம்பெண்ணின் கொலையில் மர்மம் இருப்பதாகவும், இதன் பின்னணியில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக்கோரி பேரிகை காவல்நிலையத்தைப் பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளியான பட்டியலின இளம்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காதலன், இளம்பெண்ணின் அக்கா லாவண்யா என்பவரிடம் பணம் கேட்கும் தொலைப்பேசி உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காவல்நிலையத்தில் இன்று முற்றுகையில் ஈடுபட்டிருந்த விசிகவினர், பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கடத்தி சென்ற கும்பல் ரூ.10 லட்சம் தருமாறு போன் மூலம் மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செந்தமிழ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், சூளகிரி, பேரிகை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாதிய வன்கொடுமைகளும், சாதிய கொலைகளும் நடந்தவாறு உள்ளதாக தெரிவித்தார். இது போன்ற குற்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்கதையாக உள்ளதால், ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை, வன்கொடுமை பகுதியாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாடு அரசு, அதனை பட்டியலின மக்களுக்கு கிடைக்கிறதா? என கண்காணிப்பதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பேரிகை அருகே பட்டியலின இளம்பெண்ணைப் பணத்திற்காகக் கடத்தி சென்று அப்பெண்ணின் குடும்பத்திற்கு போன் மூலம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதோடு, கொலை செய்து வீசியுள்ளனர்.தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடத்தும் முதலமைச்சரின் ஆட்சியில், பட்டியலினப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் தங்களின் பகுதியை ஏன் வன்கொடுமை பகுதி என அறிவிக்கவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கேள்வியெழுப்பினர்.
அதேநேரம் மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதாகவும், பட்டியலினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும், சாதிய மோதல்கள் நடந்தாலும், சாதிய வன்கொடுமை நடந்த பகுதியை வந்து பார்வையிட ஆட்சியர் மறுப்பதாக' குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பட்டியலின பேராசிரியைக்கு பாலியல் துன்புறுத்தல் - பேராசிரியரை டிஸ்மிஸ் செய்ய விசாரணைக்குழு பரிந்துரை!