கிருஷ்ணகிரி: ஓசூர் பாகலூர் சாலையில் லிட்டில் வேலி பிரீமியம் பிரி என்ற தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மஞ்சுளா என்பவரிடமிருந்து அரவிந்த் என்பவர் வாங்கி உள்ளார். ஏற்கனவே இந்த பள்ளிக்கு பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாத நிலையில், பள்ளி நிர்வாகி அரவிந்த் புதிதாகத் தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வந்துள்ளார்.
அதன் அடிப்படையில் வருவாய்த்துறையிடம் பொது கட்டிட அனுமதிக்கு அரவிந்த் விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர் அந்த மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்குள்ள சில குறைபாடுகளை அவர் கண்டறிந்து அதனைச் சரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் பொது கட்டிட அனுமதிக்கு ரூ.50 ஆயிரம் வேண்டும் எனவும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி நிர்வாகி அரவிந்த் இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.42 ஆயிரம் நோட்டுக்களை பள்ளி நிர்வாகி அரவிந்திடம் கொடுத்து தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரிடம் கொடுக்க வைத்துள்ளனர்.
அப்போது அதிரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கவாஸ்கர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.