கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவரது சடலம் இன்னும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார்.
அதே போல் ஆயுத பூஜைக்காக பூ வாங்கச் சென்ற ஈரோடு மாவட்டம் அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (36), தனது மகன் முகில்(8) உடன் உத்தனப்பள்ளி அருகேயுள்ள ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்திற்குக் கீழ் சென்றபோது இருவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற இராயகோட்டை தீயணைப்புத் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல், இம்மாதம் 1ஆம் தேதி வரையிலான எட்டு நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி தந்தை மகன் பலி!