தமிழ் மொழியை சிறுமைப்படுத்தியும், இந்தி, சமஸ்கிருதம் போன்ற ஆரிய மொழிகளை மிகைப்படுத்தியும் அரசுப் பாடநூலில் கருத்துகள் இடம்பெறுவதும், அதற்கு அரசு வருத்தம் தெரிவிப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகியுள்ளது. இதற்கு அரசுத் தகுதித் தேர்வுகளும் விதிவிலக்கல்ல.
அந்த வகையில் இம்முறை 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி (The Status of Tamil as a Classical Language) என்ற தலைப்பின் கீழ் சீன மொழி(Chinese - 1250 BC (BCE), ஹிப்ரூ (Hebrew - 1000 BC (BCE), லத்தீன் (Latin - 75 BC (BCE), அரபிக் (Arabic - 512 AD (CE), தமிழ் (Tamil - 300 BC (BCE), கிரீக் (Greek - 1500 BC (BCE), சமஸ்கிருதம் (Sanskrit - 2000 BC (BCE) என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சமஸ்கிருத மொழி 4,000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும், தமிழ் மொழி 2,300 வருடங்கள் பழமையானது என்றும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் வளர்ச்சி கழகத்தின் இந்த செயல்பாடு தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், தமிழ் பேராசிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் நம்மிடையே பேசினார். அப்போது, “என்றைக்குமே தமிழ் மொழி என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்பட்டாலும் தமிழைப் பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தோன்றியது என்று கூறிவிட முடியாது.
இருப்பினும் ஒரு ஒப்புமைக்காக வரையறை செய்து தமிழ் பாட புத்தகங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிராக தமிழ் ஒரு உயர்தனிச் செம்மொழி என்று குறிப்பிட்டுவிட்டு, காலத்தால் மிகவும் குறைந்தது என மேற்கோள்காட்டுவது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. இந்த இழிநிலையை மாற்றி சரியான முறையில் பாடத்தை அமைத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே, பாரதியாரின் முண்டாசுக்கு காவி வர்ணம் பூசி சர்ச்சையில் சிக்கிய பாடநூல் கழக ஊழியர்கள் தற்போது தமிழை சிறுமைப்படுத்தும் விதமான கருத்தை திணிக்க முயன்று அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மேலும், இதுபோன்ற விவகாரங்கள் தொடர்கதையாகி வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், இனி இவ்வாறு நடைபெறாது என்ற உறுதியை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.