கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் ஜனவரி 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் 25 சவரன் தங்க நகைகள், 93 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
அவரது உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப் சிங் பாகல் (22), சங்கர் சிங் பாகல் (36), பவன் குமார் விஸ்வகர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டதைச் சேர்ந்த பூபேந்தர் மஞ்சி (24), விவேக் மண்டல் (32), உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த டேக் ராம் (55), ராஜீவ் குமார் (35) ஆகிய 7 பேரை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சம்சாத்பூர் பகுதியில் காவல் துறையினர் கைது செய்தனர்.
கிட்டத்தட்ட 18 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை ஓசூர் காவல்துறையினர் இன்று (ஜன.26) அதிகாலை ஓசூருக்கு அழைத்து வந்தனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் காவல்துறையினர் இரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை: 10 தனிப்டைகள் அமைப்பு!