கிருஷ்ணகிரி : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், கட்சி தொடர்பான கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். அரசியல் தலைவர்களின் சிலைகளை, கட்சிகளின் பெயர்களை மறைக்க வேண்டும்.
10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது. மசூதி, தேவாலயம், கோயில், கல்விச்சாலைகளை பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுப்பது போன்றவற்றுக்கு தடை விதிப்பு என்பன போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மத்தியகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள், கட்சிக் கொடி தோரணங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சிப்காட் போன்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக, மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் அகற்றப்படாமல் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் விதிமுறையின்படி அகற்ற வேண்டும் என அவர்கள் தேர்தல் அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல்