கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாள்களாக இயங்காமல் இருந்தன. இதனால் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தனர். மேலும், விடுமுறைகால ஊதியம், இயந்திரங்கள் பழுது, பராமரிப்புச் செலவு உள்ளிட்டவைகளுக்கு சிறு, குறு தொழில் முனைவோரும் சிரமப்பட்டனர்.
அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் கடந்த வாரம் சுயசார்பு திட்டத்தை அறிவித்தார். அதனால், நிம்மதியடைந்த சிறு, குறு தொழில் முனைவோர், இந்த வாரம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலை மீண்டும் தொடங்கியுள்ளனர். எனினும், பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் டிவிஎஸ், அசோக் லேலண்ட் போன்ற ஒரு சில பெரும் தொழிற்சாலை நிறுவனங்கள் மட்டும் கடந்த வாரம் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு திறக்கப்பட்டன.
அந்த நிறுவனங்களின் உற்பத்தி ஆர்டர்கள் சிறிய நிறுவனங்களுக்கு இன்னும் வழங்காத நிலையில், அவர்களை நம்பியுள்ள உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பெரிய தொழிற்சாலைகளும் விரைந்து திறக்க வேண்டும் என்று சிறு தொழில் முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சிறு, குறு தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தபோது, பணியாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும், இயந்திரங்கள் பழுது ஏற்படுவதை தவிர்க்கவும் சுழற்சி முறையில் பணியை தொடங்கியுள்ளோம்.
பெரிய தொழிற் கூடங்களைத் திறக்கவும், புதிய ஆர்டர்கள் கிடைக்கவும் பெரும் தொழில் நிறுவனங்கள் வழிவகை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து சிறு தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டு வழக்கமான பணியை தொடங்க முடியும் என்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த சலுகைகள், விரைவில் கிடைக்கும்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் பொற்கொல்லர்கள்