ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ரோகித் சர்மாவுடன் முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா - ரித்திகா ஜோடிக்கு நேற்று (நவ.16) அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தனது மனைவியை உடன் இருந்து கவனித்துக் கொள்வதற்காக இந்திய அணியுடன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணியை வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஓவல் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ரோகித் சர்மா அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுடன் சேர்த்து முகமது ஷமியும் அணியில் மீண்டும் இணைவார் எனத் தகவல் கூறப்படுகிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.
காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த முகமது ஷமி ஏறத்தாழ ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வரும் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக களமிறங்கிய முதல் நாளிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் மீண்டும் பார்முக்கு வந்ததை உணர்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விராட் கோலியின் சாதனையை முறியடித்த திலக் வர்மா! என்ன தெரியுமா?