ஐதராபாத்: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கராச்சி, ராவல்பின்டி ஆகிய பகுதிகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் மண்ணில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஹைபிரிட் மாடலில் தொடர்:
இதனால் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுமா, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம் ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ தான் இதற்கு காரணமாக அமைந்து உள்ளது. அந்த வீடியோவில் பயங்கரவாதி ஜாகியுர்-ரஹ்மான் லக்வி (Zakiur-Rehman Lakhvi) சகஜமாக லஹூரில் சுற்றித் திரிவது போல் காணப்படுகிறது.
அபு பஸி பெயரில் அறிமுகம்:
ஏறத்தாழ 3 நிமிட வீடியோவில், பொது மக்களுடன், பொது மக்களாக கலந்து காணப்படும் ஜாகியுர்-ரஹ்மான் லக்வி பயிற்சியில் ஈடுபடுவது போல் தெரிகிறது. மேலும், மற்ற மக்களுக்கு அவர் அபு பஸி என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்படுவதும் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே லாஹூர் மைதானத்தில் தான் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளன. அதே லாஹூரில் பயங்கரவாதி ஜாகியுர்-ரஹ்மான் லக்வி சர்வசாதாரணமாக தென்படுவது போல் காணப்படும் வீடியோ பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. சர்வசாதாரணமாக சுற்றித் திரியும் பயங்கரவாதிகளுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் எவ்வாறு பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்புடன் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மும்பை தாக்குதலின் காரணகர்த்தா:
இந்தியாவில் நடத்தப்பட்ட 26/11 மும்பை தாக்குதலின் காரணகர்த்தாவாக இந்த ஜாகியுர்-ரஹ்மான் லக்வி அறியப்படுகிறார். அமெரிக்கா மற்றும் ஐநா, ஜாகியுர்-ரஹ்மான் லக்விவை பயங்கரவாதி என பிரகடனப்படுத்தி உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு உலக கண்ணை மறைக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு ஜாகியுர்-ரஹ்மான் லக்விக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இருப்பினும், ராவல்பின்டி மற்றும் லாஹூரில் ஜாகியுர்-ரஹ்மான் லக்வி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோவை ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க: ரோகித்துடன் ஆஸ்திரேலியா பயணிக்கும் முகமது ஷமி! இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?