கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக புகார் அளித்திருந்தார்.
அதில், "பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும், அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் விளம்பரபடுத்தியிருந்தார். அதை நம்பி நான் அவரை தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்தார். அப்போது அவர் சைரன் வைத்த காரில் காக்கி உடையில் காவல்துறையினர் போல் வந்தார்".
அவரை நம்பி காரில் ஏறிய என்னிடமிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கைப்பேசி, நகைகள் அனைத்தையும் பறித்துச் சென்று மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டுச் சென்றார். இவ்வாறு அந்த மனுவில் சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் போலியான காவலர் வாகனம் பேரிகை பகுதிக்கு வந்தபோது அந்த வாகன எண்ணை வைத்து காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் பிரகாஷ் என்பவரின் உண்மையான பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் இதுபோன்று டிஎஸ்பி, ஐடி அலுவலர் வேடங்களில் பொதுமக்களை ஏமாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற ஐந்து நபர்களான பாபு, சக்திவேல், கண்ணன், மன்சூர், மதன்செட்டி ஆகியோரையும் சேர்த்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இதையும் படிங்க;