கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள்பட்ட கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கான டெண்டர் அம்மாவட்ட ஆட்சியரால் கடந்த மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பூர்த்திசெய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெண்டர் படிவங்கள் திறந்து பார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா ஊரடங்கின் மத்தியில் ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாத நிலை தற்போது இருப்பதால், இந்த டெண்டருக்கு தடைவிதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் செல்லகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அதில், ”தற்போது மத்திய அரசின் அனைத்து டெண்டர் நடவடிக்கைகளும் இ-டெண்டர் (மின்னணு டெண்டர்) முறையில் உள்ளதால், இந்த டெண்டரையும் திறந்த டெண்டராக நடத்தாமல் மின்னணு முறையில் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம், டெண்டர் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 4ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இ-பாஸ் பெற்று கிருஷ்ணகிரி செல்லலாம் எனவும் தெரிவித்த அரசு தலைமை வழக்குரைஞர், இந்த மனு குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு!