கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்னல் வாடி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக மானியத்துடன் கூடிய பசுமை குடில் மூலம் கார்நேசன் ஜெர்பரா மலர் மற்றும் மாதுளை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு பசுமை குடில் மேற்கூரை மூலம் மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ' கடந்த நிதியாண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தில் 6 ஆயிரத்து 730 ஹெக்டர் பரப்பளவில் ரூ.58 கோடி மதிப்பீட்டிலும், நடப்பு நிதியாண்டில் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 7 ஆயிரத்து 250 ஹெக்டர் பரப்பளவில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதாக' தெரிவித்தார்.
'இரண்டு மடங்கு உற்பத்தி 3 மடங்கு லாபம்' என்கின்ற அடிப்படையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.100 மானியமும், பெரு விவசாயிகளுக்கு ரூ.75 மானியமும் வழங்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
பயிர் சாகுபடியை ஊக்குவித்து தரத்தை உயர்த்தவும், அறுவடைக்கு பிந்தைய சேதாரத்தை குறைக்கவும் முக்கிய இனங்களான பசுமைக் குடில்கள், நிழல் வலை குடில்கள், சிப்பம் கட்டும் அறைகள் மற்றும் முன்குளிரூட்டும் அறைகள் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் நெகிழியுடன் கூடிய பசுமைக்குடில்கள் மற்றும் நிழல் வலைக் குடில்கள் அமைப்பதற்கு ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1 ஏக்கர் பரப்பிற்கு 50 சதவிகித மானியமும், முன் குளிரூட்டும் அறைகள் அமைக்க 35 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
மழைநீரைச் சேமிக்க நீர் சேகரிக்கும் தொட்டி 20x20x3 மீட்டர் என்ற அளவில் (12 லட்சம் லிட்டர் கொள்ளளவு) அமைப்பதற்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது என்றும், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உருளை, தக்காளி, மா பயிர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு கிராமங்களில், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.