கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி தமிழ்நாடு மாநில எல்லையாக இருக்கிறது. இந்த பகுதியை ஒட்டி விவசாயம் செய்யப்படும் ராகியை உண்ணுவதற்காக, ஆண்டுதோறும் கர்நாடக வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த ஆண்டும் ராகி அமோக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 35 காட்டு யானைகள், ஜவளகிரி வனப்பகுதி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளன. இந்த யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகளும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 15 யானைகளும் முகாமிட்டுள்ளன.
மேலும் இந்தாண்டு யானைகளின் வருகை தொடங்கி இருப்பதால், அறுவடைக்குத் தயாரான ராகிப் பயிர்களை தேன்கனிக்கோட்டை, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விரைந்து அறுவடை செய்திடுமாறு வனத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதுமட்டுமின்றி கூலிக்கு ஆட்கள் கிடைக்காவிட்டால் பக்கத்து கிராம மக்களை அழைத்தாவது, அறுவடையைத் தீவிரப்படுத்தும் பணிகளை விவசாயிகள் செயல்படுத்த வேண்டும் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
யானைகளின் வருகையால் தாவரக்கரை, நொகனூர், பிக்கனப்பள்ளி, சாலிவாரம், அத்திக்கோட்டை, தல்சூர், சந்தனப்பள்ளி, ஜார்கலட்டி, முத்தூர், திப்பச்சந்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்; ஆடு, மாடு மேய்க்க முக்கோணப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: