கிருஷ்ணகிரி அணை, அரசிதழில் பிரசுரம் பெற்ற ஏரிகளில் இருந்து விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி ஏரிகளிலிருந்து கடந்த 13ஆம் தேதி முதல், தங்களது நிலத்திற்கு தேவையான வண்டல் மண்ணை விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் எடுத்து வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து கடந்த 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரையிலான 10 நாள்களில், 576 விவசாயிகள், 10 ஆயிரத்து 86 கன அடிக்கு, மூன்றாயிரத்து 564 யூனிட் வண்டல் மண் எடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புகளில் பெய்த மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் மேற்புறத்தில் இருந்து தற்போது மணல் எடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், சில நாள்களில் வண்டல் மண் எடுப்பது நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், அவதானப்பட்டி ஏரியிலிருந்து, கடந்த 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரையிலான 10 நாள்களில் 147 விவசாயிகள், தங்களது விளைநிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை டிராக்டர்களில் எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து ஏரியிலிருந்து மூன்றாயிரத்து 395 கனமீட்டருக்கு, 1200 யூனிட் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அணையின் நீர்மட்டம் உயர்ந்து, இடதுபுற கால்வாய் மூலம் அவதானப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும்வரை, விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உரிமையாளர் இறந்தது தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த நாய்!