கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2950-க்கும் மேற்பட்டவர்களும், வேலைவாய்ப்பு வழங்கும் 105 தனியார் நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.
அப்போது 1,524 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கி பேசிய அவர், "படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 1,559 பேர் தனியார் துறையில் சேர்ந்துள்ளனர்.
மேலும் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் இலவச பயிற்சிகள அளிக்கப்பட்டுவருகின்றன. இதுமட்டுமல்லாமல் சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் மானியக்கடன்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.
இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்வில் முன்னேற ஒரு நல்வாய்ப்பாக இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது என்றார்.