கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கர்நாடகா மாநிலத்தின் சிங்சேனா அக்ரகாரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர், வீட்டில் தனியாக இருப்பதையறிந்த இரண்டு கொள்ளையர்கள், கடந்த வாரம் அவரை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
இது குறித்து, எப்பகோடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஆனேக்கல் அருகே முத்தாள மடுகு என்னுமிடத்தில், குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்றிரவு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குற்றவாளிகள் இருவரையும் சுற்றி வளைத்தனர். அப்போது, அவர்கள் காவல் துறையினரை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, எப்பகோடி காவல் ஆய்வாளர் கவுதம், பன்னார்கட்டா காவல் உதவி ஆய்வாளர் கோவிந் ஆகிய இருவரும் தங்களது துப்பாக்கியால், குற்றவாளிகளின் கால் பகுதியில் சுட்டு பிடித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் சைக்கா (எ) வேலு , பாலா (எ) பாலகிருஷ்ணா என்பது தெரியவந்தது. காயமடைந்த இருவருக்கும் ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்; தடயவியல் துறையினர் ஆய்வு