கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் பார்சல் வெடித்த சம்பவம் எதிரொலியாக, ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், மங்களூரு கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் நேற்று (நவ.19) ஆட்டோவில் சென்ற பயணியின் பார்சல் திடீரென வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோர் காயமடைந்தனர். விசாரணையில் ஆட்டோவில் சென்ற பயணி கொண்டு சென்றது 'குக்கர் வெடிகுண்டு' என உறுதியாகியது எனவும்; இது சதித்திட்டம் தான் எனவும் கர்நாடக டிஜிபியும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து கர்நாடக போலீசார், மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பிரேம் ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில் அவருடைய பெயர் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அவர்கள் பயன்படுத்திய சிம் கார்டு மற்றும் போலி ஆதார் கார்டு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் இன்று (நவ.20) தமிழ்நாடு போலீசார் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தவிர, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து கார்கள், டெம்போ வாகனங்கள், லாரிகள் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டை ஒட்டிய கர்நாடகா எல்லை மட்டுமின்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைகளிலும் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 'கரூர் குரூப்'