கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரத்தில் வசித்துவருபவர் 'வில்லங்கம்' என்கிற நாகராஜ். இவர் பைனான்ஸ் தொழில் நடத்திவருவதுடன் இந்து மகாசபா அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருந்துவருகிறார். இவர் 'வில்லங்கம்' என்கின்ற மாத இதழ் பத்திரிகை நடத்திவந்தவர். பத்திரிகை நடத்திவந்தபோது பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதாகப் புகார்கள் வந்ததை அடுத்து அந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.
சமத்துவபுரம் அருகிலுள்ள அனுமந்த நகர் குடியிருப்புப் பகுதியில் பைனான்ஸ் வசூல்செய்ய நாகராஜ் சென்றபோது திடீரென அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றிவளைத்து கத்தியால் கழுத்து, மார்பகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் குற்றம் நடந்த நிகழ்விடத்திற்கு விரைந்துசென்று நாகராஜின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின் கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாயை வரவழைக்கப்பட்டு காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டி கங்காதர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இக்கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவித்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.