கிருஷ்ணகிரியை அடுத்த வள்ளுவர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(35). வர்ணம் பூசும் வேலை செய்யும் இவர், முத்து(32) என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். முத்து வேறொருவரின் மனைவி என்றும், கணவர், குழந்தைகளை விட்டுப் பிரிந்து குமரேசனுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கு 14 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குடிக்கு அடிமையான குமரேசன் சரியாக வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து செலவுக்கு பணம் இல்லாத நிலையில் தனது 14 மாதக் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து குழந்தைகள் நலக் குழும அலுவலர்கள், நேரில் வந்து விசாரணை நடத்தியதில், குழந்தை விற்கப்பட்டது உறுதியானது. இதனையறிந்த குமரேசன், முத்துவையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானார். இதனையடுத்து அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.