கிருஷ்ணகிரியிலிருந்து சரியாக 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெரிய சக்னா என்ற ஊர். அங்கிருந்து செங்குத்தாக உள்ள மலையில் அமைந்துள்ளது எக்கல் நத்தம் எனும் கிராமம். இங்கு மூன்று சமுதாயத்தைச் சேர்ந்த 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.சரியாக 463 வாக்காளர்கள் இக்கிராமத்தில் உள்ளனர். இங்கு, நீண்ட நாள் பிரச்னையான தண்ணீர், சாலை வசதி சரிசெய்யப்படாததால், அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், மருத்துவ வசதியை பயன்படுத்திக் கொள்வதற்கும் கிருஷ்ணகிரி வந்து செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து இங்குள்ள பெண்கள் கூறும்போது, "இங்கு இரண்டே இரண்டு கிணறுகள் மட்டும் உள்ளன. அரசு சார்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி கட்டி தரப்பட்டது. சுத்தமான குடிநீர் பெரிய சக்னா ஊரில் இருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர் பராமரிப்பின்மை காரணமாகவும் இங்குள்ள குழாய்கள் வருகின்ற வழியிலேயே நாலைந்து இடங்களில் துண்டாக்கி கிடக்கின்றன.
தண்ணீர் வருவதற்கு உண்டான எந்த வசதியும் இல்லாமையால் இங்குள்ள கிணற்றில் தண்ணீர் மிகவும் அதல பாதாளத்துக்கு சென்று உள்ளது. எனவே ஒருமுறை இறைக்கும்பொழுது இரண்டு லிட்டர் தண்ணீர் மட்டுமே ஒருவரால் இறைக்க முடிகிறது. இவ்வாறு இழைத்துக் கூடத்தில் நிரப்பிக்கொண்டு வீட்டு பயன்பாட்டிற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கு நீண்ட நேரமாகிறது.
இங்கு நாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் தண்ணீரின்றி ஒரு நாளைக்கு நூறு குடும்பங்கள் மட்டுமே சுழற்சி முறையில் தண்ணீரை பயன்படுத்த முடிகிறது" என்றனர்.
மேலும், தண்ணீர் இறைக்கும் கிணற்றுக்கும் இவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தூரத்திற்கும் ஒரு மைல் தூரம் உள்ளதால் நடந்தே செல்வது மிகவும் சிரமமாக உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இத்தகைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் இங்குள்ள 463 வாக்காளர்களும் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இதுபோன்ற கிராமங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவைகள் உள்ளன.
சாலை வசதியின்மையால் தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது கையில் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு நள்ளிரவில் தொட்டில் கட்டி, 6 கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து பிரசவம் பார்த்து தன் மனைவியை இழந்த ரகுராமன் கூறும்போது, " நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்தாலும் இங்கு தேர்தல் பணிக்கு வரும் அரசு அதிகாரிகள், வாக்குகளை எங்கள் கிராமத்தின் மூலமாக தேர்தல் பணி சான்றிதழைக்கொண்டு, வாக்களித்துவிட்டு சென்று விடுவதால் 100 விழுக்காடு புறக்கணிப்பு என்பது நீர்த்துப் போனது " என்று அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், " தேர்தலைப் புறக்கணித்தாலாவது எங்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அதுவும் தவிடுபொடியாக மாறிவிடுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்வதில்லை. தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு கவனத்தில் கொள்ள வேண்டும் " என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக மாவட்ட வனவியல் அலுவலரிடம், ஈ டிவி பாரத் சார்பில் பேசும்பொழுது, ”வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்று கூறினார்.