கிருஷ்ணகிரி: ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர், ரவீந்திரன் (61). இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி. இவரது மனைவி ரெங்கநாயகி(55) அரசுப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு குயில்மொழி என்ற மகளும், முகிலன் என்ற மகனும் உள்ளனர். முகிலன் அயர்லாந்து நாட்டில் பணிபுரிகிறார். அடுத்த மாதம் 10-ம் தேதி முகிலனுக்கும், சேலம் மாவட்டம், சின்ன திருப்பதியைச் சேர்ந்த நித்ய சுபாசினி என்பவருக்கும், சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மகனின் திருமணத்திற்கு அச்சிடும் திருமண அழைப்பிதழ் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என ரவீந்திரன் யோசித்துள்ளார். அந்த வகையில் உலகப் பொதுமறையான திருக்குறளை, அதற்கு விளக்க உரையுடனும் மற்றும் ஆண், பெண் குழந்தைகளின் ஒரு லட்சம் தமிழ்ப்பெயர் கொண்ட 2 புத்தகத்துடன் திருமண அழைப்பினை இணைக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளும் புத்கத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தக வடிவிலான திருமண அழைப்பிதழில் 280 பக்கங்கள் உள்ளன. மொத்தம் 500 புத்தகத் திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர். அதேபோல், 256 பக்கங்களைக் கொண்ட மற்றொரு புத்தகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க ஒரு லட்சம் தமிழ்ப்பெயர் இடம் பெற்றுள்ளது.
அதில் நமது குடும்பம், தமிழ் நெறி குடும்பமாக விளங்க, நம் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டவேண்டும். நம்முடைய பெயர் பிறமொழியில் அமைந்திருந்தால் அதனை தமிழ்படுத்திக்கொள்ளவும், அனைத்து இடங்களிலும் தமிழிலியே கையெழுத்திட வேண்டும், அனைத்து கல்வித்துறையிலும் தமிழ் வாயிலாக படிக்க வேண்டும்; திருமணம் உள்ளிட்ட இல்லச் சடங்குகளை தமிழிலேயே நடத்த வேண்டும்; திருக்குறளை வாழ்வியல் நூலாக கடைப்பிடிக்க வேண்டும் என அச்சிட்டிருந்தனர்.
இந்த திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு அந்த குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். திருமண அழைப்பிதழ் வெறும் காகிதமாக இருக்காமல், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தக அழைப்பிதழாக வழங்கும் இந்த குடும்பத்தின் முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
இது குறித்து ரவீந்திரன் கூறும் போது, “சிறுவயதிலிருந்து தமிழ் மீதும் திருக்குறள் மீது பற்று அதிகம். இதனால் நான் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் என வைத்திருந்தோம், இதன்மூலம் தமிழ் மீது மேலும் பற்று ஏற்பட்டது. தற்போது தனது மகன் திருணத்திற்கு அழைப்பிதழ் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து எனது நண்பர்கள் தமிழ்முகிலன், நற்றேவன் ஆகியோர் ஆலோசனைப்படி, திருக்குறள் விரிவுரை புத்தகம் மற்றும் தமிழ் பெயருடன் இரு புத்தகங்களுடன் திருமண அழைப்பிதழை சென்னையில் அச்சிட்டேன்.
ஒரு திருமண அழைப்பிதழ் புத்தகம் அச்சிட ரூ.450 செலவானது. அதேபோல் புத்தக அழைப்பிதழ் மட்டுமின்றி, அதனை வழங்க பயன்படும் தாம்பூலப் பையில் ஒரு புறம் மணமக்கள் பெயரும், மறு பக்கம் திருவள்ளுவர் உருவமும் அச்சிட்டுள்ளோம். திருமணம் தமிழ்நெறி திருமணம் என்னும் முறையில் நடைபெற உள்ளது. தமிழ் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல காலங்கள் ஆனாலும் இந்த திருமண அழைப்பிதழ் புத்தகம், வீடுகளின் அலமாரிகளில் அலங்கரிக்கும்” என்றார்.
இந்த தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்ட உறவினர் அருண்குமார் கூறியபோது, ''பொதுவாக இல்லறம் சம்பந்தம் ஒரு குறளை மட்டுமே அச்சடித்து திருமணத்திற்கு வழங்குவார்கள். 1330 திருக்குறளும் அதன் தெளிவுரையும் மற்றும் ஒரு லட்சம் ஆண், பெண் இருபாலரின் சுத்த தமிழ் பெயர்களும் அச்சிடப்பட்டு கொடுத்தது எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இதை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்'' என மகிழ்ச்சியுடன் கூறினார்.