இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலுக்கான கொள்முதல் விலை உயர்வை அறிவிக்க மறுத்து வருகிறது. இக்காலத்தில் கால்நடைத் தீவனங்களின் விலையும், இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கக்கூடிய சுமார் ஐந்து லட்சம் பால் உற்பத்தியாளர்களும், தனியாருக்கு பால் வழங்கக் கூடிய சுமார் 10 லட்சம் பால் உற்பத்தியாளர்களும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு பசும்பால் 1 லிட்டருக்கு ரூ. 29 என்றிருப்பதை ரூ. 40ஆகவும், எருமைப் பால் ஒரு லிட்டருக்கு ரூ.35 என்றிருப்பதை ரூ. 50ஆகவும் உயர்த்தி அறிவித்திட வேண்டும். ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்த பாலுக்கு, பால் உற்பத்தியாளர்களுக்கும், ஆரம்ப சங்கங்களுக்கும் ரூ.200கோடி வரைக்கும் பாக்கி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு 50 விழுக்காடு மானிய விலையில் கால்நடை தீவனங்களையும் ஆவின் நிறுவனங்களில் வழங்கிடும் கால்நடை தீவனங்களை தரமானதாகவும் வழங்கிட வேண்டும். என்றார்.