கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது யானைகள் பிரிந்து கிராம பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற இருவரை காட்டு யானை தக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான நாகராஜ் பலத்த காயத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அய்யூர் அருகே உள்ள இயற்கை சூழல் வன சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டு வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். பின்பு அலுவலகத்தின் ஜன்னல் கதவுகள் என அனைத்தையும் பொதுமக்கள் சூறையாடினர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.யானைகள் தாக்கி உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவித்து அப்பையாவின் உறவினர்கள் வனப்பகுதியில் இருந்த உடலை எடுக்கவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக காவல்துறையினர் அப்பையா உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.