ஒசூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான ராமநாயக்கன் ஏரியில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில், அரசின் செலவில் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையில், ஜுலை 2ஆம் தேதி, செல்லகுமார் உண்ணாவிரதம் இருக்க ஒசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் உண்ணாவிரத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராமநாயக்கன் ஏரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிரப்பப்பட்ட 10 லட்சத்து 850 கிலோ லிட்டர் தண்ணீர் எங்கே சென்றது. இந்தத் தண்ணீரை 20 கோடி ரூபாய்க்கு அலுவலர்கள் விற்றார்களா" என கேள்வி எழுப்பினார். "அப்படி இல்லை என்றால் அந்த தண்ணீர் எங்கே என அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, "செல்லகுமார் ராமநாயக்கன் ஏரியை வைத்து அரசியல் செய்துவருகிறார். இந்தத் திட்டம் 25 லட்சம் ரூபாய் செலவில்தான் நிறைவேற்றப்பட்டது.
தண்ணீர் நிரப்பட்ட சில மாதங்களில் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதால் தண்ணீர் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஏரியில் நிரப்பப்பட்ட தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்கள் தினந்தோறும் குடிநீருக்காக உறிஞ்சி வருகிறார்கள், பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க... 'புதிய தொழில் கத்துக்கோங்க' - கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்