கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி தேர்ப்பட்டையைச் சேர்தவர், நந்தினி (25). இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரது கணவன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் நந்தினிக்கு தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே மனைவியை பிரிந்து ரஞ்சித் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரஞ்சித்துடன் சேர்ந்து நந்தினி தனது 2 மகன்களுடன் ஒசூர் அடுத்த ஆலூர் கிராமத்தில் குடியேறினர். ரஞ்சித் அவ்வபோது நந்தினியின் இரண்டு மகன்களையும் அடித்து வந்ததாக தெரிகிறது. இதனால், நந்தினி தனது 6 வயது மூத்த மகனை விடுதியில் சேர்த்துவிட்டு, 3 வயதான இளைய மகனை தன்னுடன் வைத்துக்கொண்டார்.
மேலும், தனக்கு இடையூறாக இருப்பதாக 3 வயது குழந்தையை, ரஞ்சித் டிசம்பர் 6ஆம் தேதி பீர்பாட்டிலால் தலையில் தாக்கினார். இதனையடுத்து குழந்தை 7ஆம் தேதி ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் 22 ஆம் தேதி ஒசூர் திரும்பினர்.
கடந்த 27ஆம் தேதி குழந்தை உயிரிழந்ததாக ஒசூர், கோகுல்நகர் சுடுகாட்டில் குழந்தையை புதைத்துள்ளனர். இது வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக ரஞ்சித், நந்தினியை மிரட்டியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க நந்தினியின் தாய் வள்ளி, நந்தினி வீட்டிற்கு குடும்ப அட்டை வாங்க சென்றபோது இளைய மகன் குறித்து கேட்டதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வள்ளி இதுகுறித்து குழந்தையின் பெரியப்பா சுரேசிற்கு தகவல் அளித்தார். பின்னர், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ரஞ்சித் மற்றும் நந்தினியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இருவரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்தனர். தொடரந்து அந்த சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Bank server Hacking: கூட்டுறவு வங்கிய சர்வரை ஹேக் செய்து கொள்ளை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியர்கள்..