கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் நந்தினி. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு மூன்றரை வயதுடைய நயனா ஸ்ரீ என்னும் பெண் குழந்தை உள்ளது. கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் இவருக்கு அசோகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இன்று மதியம் நந்தினி, அசோகனுடன் இணைந்து வீட்டில் மது அருந்தியுள்ளார். போதை மிகுதியால் தன்னுடைய மகளுக்கும் மது ஊற்றிக்கொடுத்து, குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். குழந்தையின் ஆபத்தான நிலையை உணர்ந்த அவர்கள் அவசர ஊர்தியின் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோது, குழந்தையின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
மேலும், குழந்தை ரத்தவாந்தி எடுத்ததையடுத்து, குழந்தைக்கு மது ஊற்றப்பட்டதா அல்லது விஷம் ஏதேனும் கொடுக்கப்பட்டதா என சந்தேகித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைக்கு ரத்த வாந்தி எடுத்ததற்கு காரணம் என்ன? திருமணத்தை மீறிய உறவுக்கு குழந்தை தடையாக இருந்ததால் விஷம் கொடுக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் ஓசூர் மகளிர் காவல் துறையினர் அசோகனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
தாய் மகளுக்கு மது ஊற்றி, அடித்து கொடுமைப் படுத்தியபோதிலும் குழந்தை அம்மா அம்மாவென்று அழைத்தது மருத்துவர்களை மட்டுமல்லாது பொதுமக்களின் கண்களையும் கலங்கவைத்தது.
இதையும் படிங்க: மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் - பெற்றோர்கள் முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க மனு