சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் ரப்பர் ஸ்டாம்ப் செய்யக்கூடிய கடை நடத்தி வருகிறார். இவரது தாய் வைரம்மாள் (55). குடும்பத் தகராறு காரணமாக வைரம்மாள் தன் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தாய் - மகன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கோயிலுக்கு சென்று வரலாம் என்று வைரம்மாளை வாடகை காரில் அழைத்துக் கொண்டு கார்த்தி கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்பு இருவரும் அங்குள்ள தர்காவிற்கு செல்வதற்காக நடந்து சென்றனர். வழியில் அவர்கள் இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்தி தாய் வைரம்மாளை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் வைரம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.
இதை வழியில் சென்றவர்கள் பார்த்து கூச்சலிட, கார்த்தியும் அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியை கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வைரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.