கிருஷ்ணகிரி: 12 ஆம் நூற்றாண்டிலேயே சாதியை ஒழிக்க பலரும் பாடுபட்டதை இந்த நூரொந்து சாமி மலை கோயில் தன் வரலாற்றில் பதித்து வைத்துள்ளது என சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த காலகட்டத்தில் வாழ்ந்த பட்டியல் சமூக ஆண், மாற்று சமூக பெண்ணைத் திருமணம் செய்ததால் எழுந்த கலவரத்தின் போது அங்கிருந்த மூன்று சிவனடியார்கள் இந்த மலைக்கு தியானம் செய்ய புறப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அஞ்செட்டி அருகே உள்ள காட்டிற்கு வந்து தங்கியதாக கூறப்படுகிறது. அவரே பின்னாளில் நூரொந்து சாமி என அழைக்கப்பட்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி தாலூகாவில் இருந்து 79 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நூரொந்து சாமி மலை எனும் கிராமம். இந்த கிராமம் கர்நாடக மாநில எல்லையில் இருப்பதால் அங்குள்ள மக்கள் அனைவரும் கன்னட மொழி பேசக்கூடியவர்களாகவே உள்ளனர். நூரொந்து சாமி என்னும் கன்னட வார்த்தைக்கு நூற்று ஒன்று (101) சாமி என்பது பொருள்.
தமிழகத்தின் மிகப்பெரிய மூங்கில் காடு என அழைக்கப்படும் அஞ்செட்டி வனப்பகுதியில் இயற்கை அழகினை கொஞ்சி, வனப்பகுதியை இரண்டாக பிரித்தவாறு உள்ள மலைப்பாதை பயணம் அழகானதே என்றாலும், நூரொந்து சாமி மலை கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி சற்று திகிலானதாகவே இருக்கிறது. காரணம், சாலை முழுவதும் காட்டு யானைகள் வந்து சென்ற தடையங்களும், யானை சாணத்தையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்த கிராமத்திற்கு இப்பெயர் வரக்காரணம், அடர் வனப்பகுதியில் உள்ள குகை கோயிலில் லிங்க வடிவில் நூரொந்து சாமி இருப்பதால் இந்த கிராமத்திற்கு நூரொந்து சாமி மலை என்னும் பெயர் உருவானது. இக்கோயில் மிகவும் பிரபலமடைய காரணம், அனைத்து கோயில்களிலும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் நிலையில், இங்கு மட்டும் இளநீர் ஊற்றி தீபம் ஏற்றுவது அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்துகிறது.
யார் இந்த நூரொந்து சாமி : கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் பசவண்ணா என்பவர். இவர் சாதிகளை ஒழிக்க பாடுபட்ட முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருந்துள்ளார். அவரிடம் 770 பேர் சீடர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த காலக்கட்டத்தில் பட்டியலின சமூக ஆணுக்கும், மாற்று சமூக பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடைபெற்றதால் கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது, அங்கிருந்த மூன்று சிவனடியார்கள் தியானம் செய்ய புறப்பட்டனர். அதில் ஒருவர் மலை மாதேஸ்வரர் கோவிலிலும், மற்றொருவர் கர்நாடகா மாநிலத்திலும், மூன்றாவது நபரான சிவனடியார் அஞ்செட்டி அருகே உள்ள காட்டின் குகையில் தியானம் செய்ய வந்து தங்கியதாக கூறப்படுகிறது.
நூரொந்து சாமி என பெயர் உருவாக காரணம்: நூரொந்து சாமி, மலை மாதேஸ்வரா சுவாமியுடன் தியானத்தில் பேசியபோது, அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள மலைகளில் 101 குகைகள் இருப்பதை நூரொந்து சாமி ஞானத்தின் மூலம் கண்டறிந்து கூறியதாக சொல்லப்படுகிறது.
நூரொந்து சாமி, அங்கிருந்த வீடுகளில் ஒரு உருண்டை களியையும், குழம்பினையும் யாசகம் பெற்று உண்டு வந்தபோது திடீரென 100 பேர் நூரொந்து சாமியினை பரிசோதிக்க குகைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பசி என கூறியபோது நூரொந்து சாமி தனது தூக்குப்பையில் இருந்த களி மற்றும் குழம்பினை ஆசிர்வதித்து அக்சய பாத்திரமாக செய்து பையில் இருந்த களியினை எடுத்து பக்தர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அவரும் 101 வது நபராக உணவு அருந்தியபோது களி, சாப்பிட சாப்பிட குறையாததால் யாரும் முழுமையாக சாப்பிட முடியாமல் போனதாக நம்பப்படுகிறது. அப்போது மலை மாதேஸ்வரர் காட்சியளித்து உன்னுடைய சக்தி புனிதமானது எனக்கூறி சாஸ்டாங்கமாக வணங்கி 100 நபர்களின் பசி தீர்த்து 101 வது நபராக சாப்பிட்ட நீங்கள் நூரொந்து (நூற்றொண்று) சாமி எனப்படுவீர்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இளநீரில் தீபம் எரிய காரணம்: 12ஆம் நூற்றாண்டில் நூரொந்து சாமி வாழ்ந்ததாக கூறப்படும் மலை குகையில், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மடாதிபதி குகை கோயில் முன்பாக இருந்த குளத்தின் நீரை கொண்டு தீபம் ஏற்றியதாகவும், பின்னர் பக்தர்கள் நீரை அசுத்தம் செய்ததால் சுத்தமான நீர், கலப்படம் இல்லாத நீரான இளநீரை விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. 800 ஆண்டுகளை கடந்து அதே குகை கோயிலில், 21வது நூற்றாண்டிலும் இளநீரை கொண்டு தீபம் ஏற்றி வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இளநீரை ஊற்றி பரிசோதனை: இந்நிலையில் இளநீரில் விளக்கு எப்படி எரியும் என பரிசோதித்தபோது கோவில் அர்ச்சகர் பக்தர்கள் கண் முன்னே விளக்கினை துடைத்து இளநீரை ஊற்றி திரியை நீரால் கழுவி தீபம் ஏற்றியபோது எவ்வித சந்தேகமும், குழப்பமும் ஏற்படாமல் தீபம் எரிந்தது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் குகை கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூரொந்து சாமி மலை கிராமத்திற்கு சென்றபோது நூரொந்து சாமிகள் ஜீவ சமாதி அடைந்த மடத்தினை காண முடிகிறது. தற்போது கோயிலின் 13 வது மடாதிபதியாக சன்னியாசி சதாசிவ சுவாமிகள் இருந்து வருகிறார். அவரிடம் பேசுகையில் கோயில் மற்றும் சாமியின் வரலாறு தெரியவந்தது.
13ஆம் நூற்றாண்டில் நூரொந்து சாமி கோயில் அதிசயத்தை உணர்ந்து ஒரு மடத்திற்கு தேவையான வாள், வைர கிரீடம் உள்ளிட்டவைகளை மைசூர் மகாராஜா வழங்கியதாக அவர் தெரிவித்தார். மேலும் பசவண்ணா வழியில் வந்த நூரொந்து சாமிகள் லிங்கத்தை மட்டுமே வழிபட்டு சாதிகளை நம்பாதவராக இருந்ததாக தெரிவித்து உள்ளார்.
அதற்காக மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 20க்கும் அதிகமான குழந்தைகளை மடத்தில் தெய்வ பக்தியோடு வளர்பதாக கூறினார். அடர்ந்த காட்டில் இளநீரில் தீபம் எரியும் கோயிலினை காண கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் படையெடுத்து வருகின்றனர். சில அரசியல்வாதிகளும், மத வழிபாட்டாளர்களும் இன்றளவும் சாதிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் நிலையில், 12ஆம் நூற்றாண்டிலேயே சாதி மறுப்பாளர் இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .