கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 73ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சோல்ஜர் ஆணழகன் கிளப்' சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டு அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து 160க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இதில், 55 கிலோ எடைப்பிரிவு முதல் பல்வேறு எடைப்பிரிவில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. போட்டியின்போது, மேடையில் வீரர்கள் தங்களது கட்டுமஸ்தான உடலைக் காட்டி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். பல்வேறு எடைப்பிரிவுகளில் வெற்றி கண்டு, இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு 'மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம், 50 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சிறந்த வீரர் மற்றும் ஒவ்வொரு சுற்றிலும் ஐந்து இடங்களை பிடித்தவர்களுக்கு பணமும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்துகொண்டனர்.