கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி, பாகலூர் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுற்றித்திரியும் குரோபார், சின்ன கொம்பன் ஆகிய இரு காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்காக மாரியப்பன், பரணி என்னும் இரு கும்கி யானைகள் முதுமலை வனப்பகுதியில் இருந்து ஓசூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட சானமாவு, பேரிகை மற்றும் பேராண்டப்பள்ளி வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகளிலிருந்து பிரிந்த குரோபார் மற்றும் சின்ன கொம்பன் எனப்படும் இரண்டு காட்டுயானைகள் பாகலூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. தற்போது கெலவரப்பள்ளி அணையின் கரையோரத்தில் உள்ள தைல மரதோப்பில் இந்த இரு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்த குரோபார் எனப்படும் காட்டு யானை மூன்று பேரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி குரோபார் யானையைப் பிடித்துச் சென்று 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீலிகுண்டு அருகே காவிரி கரையோர வனப்பகுதியில் விட்டனர். ஆனால், இந்தக் காட்டுயானை மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்தது.
தற்போது, இந்த இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் வனத் துறையினர், குரோபார் யானையைப் பிடித்து முதுமலை காட்டுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து யானையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.