கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்மசந்திரம் கிராமத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படாததால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஓசூர்-பேரிகை சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், இதை ஏற்காத மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நகராட்சி பொறியாளர் சம்பவ இடம் விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு செய்வதாகவும், தற்போது தற்காலிகமாக லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும் உறுதியளித்தார்.
இதை ஏற்ற மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரமாக ஓசூர் பேரிகை சாலையில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.