கிருஷ்ணகிரி மாவட்டம், வே.மாதே கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அரசு விளம்பரத் துறை சார்பாக ஆயுஷ்மான் பாரத், உலக மக்கள் தொகை தினம் மற்றும் ஜல் சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், மழை நீர் சேமிப்பு, வான் மழை காப்போம், மக்கள் தொகை பெருக்கத்தை தடுப்போம், உடல் நலத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைச் சுமந்தபடி மாணவர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியினை அடைந்தனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து மாணவர்களிடம் உரையாற்றிய அவர், "நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, அனைவருக்கும் அரசின் சேவைகள் கிடைக்கப்பெறுவதில் சிக்கல் ஏற்படும். இட நெருக்கடி, உணவு நெருக்கடி போன்ற பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமையாகும். நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு பெரும் தடையாக உள்ளது.
மேலும், மக்களின் ஆரோக்கியத்தில் மத்திய அரசு அக்கறை கொண்டு 'ஆயுஷ்மான் பாரத்' போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசு நீர் மேலாண்மை திட்டம் எனும் 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. மழை நீர் சேகரிப்பு, ஏரி, குளம், குட்டைகளைப் பாதுகாத்து, நீர் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் கழிப்பிடங்கள் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.
பின்னர், மழை நீர் சேகரிப்பு குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. உடன் கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி, பள்ளி தலைமையாசிரியர், தனியார் தொண்டு நிறுவனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.