திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்; அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதனால், திருமண நிகழ்வுக்கு உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் முறையாக அழைப்புவிடுத்து திருமண மண்டபம் அல்லது கோயிலில் நடத்துவது வழக்கம்.
அந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதிப்பது காலங்காலமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த சரத் என்பவருக்கும், மனியாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதில், மணப்பெண், மணமகனின் பெற்றோர், சகோதரர்கள் என மொத்தம் எட்டு பேர் மட்டும் கலந்துகொண்டனர். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் நடத்தப்பட்டது. ஆனால், நேற்று மக்கள் ஊரடங்கு என்பதால் உறவினர்கள் யாரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. மேலும் மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் களையிழந்து காணப்பட்டனர்.
இதையும் படிங்க: 'மக்கள் ஊரடங்கு ஒருபுறம்... தடபுடலான திருமணம் மறுபுறம்' - வைரஸின் வீரியத்தை உணராத திருமண வீட்டார்!