கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகளைக் கட்டி ஏராளமானோர் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நிலமற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள மூன்று சென்ட் நிலம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தளி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக அலுவலர்கள் தெரிவித்ததால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.