கிருஷ்ணகிரி: பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியசெட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர், மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மேனகா (40), என்ற பெண்ணுடனும் இவருக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. கணவனை இழந்த பெண்ணான மேனகா, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயில் அருகே மீன் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு அடைக்கலம் தருவதாகக்கூறி, மன்னன் சிவா தன் வீட்டில் மேனகாவை தங்க வைத்து உள்ளார். அவரிடமிருந்து, 20 பவுன் நகைகளை வாங்கிய மன்னன் சிவா, மேனகாவிடம் அடிக்கடி பணம் கேட்டும் தகராறு செய்துள்ளார். இதனால் மேனகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி மன்னன் சிவா மிரட்டியுள்ளார். இதைத் தட்டி கேட்ட மேனகாவை மன்னன் சிவா தாக்கி விட்டு, கத்தியால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேனகா கிருஷ்ணகிரி டவுன் போலீசாரிடம் மேனகா புகார் அளித்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி டி.எஸ்.பி தமிழரசி, மன்னன் சிவா மேனகாவை மிரட்டியதை உறுதிப்படுத்தியுள்ளார். பிறகு வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க செயலாளரான மன்னன் சிவா இதற்கு முன் தீபா அம்மா பேரவை, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் மாவட்ட பொறுப்பில் இருந்து விலகி சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்த நிலையில் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் இவர் மீது கடந்தாண்டிலும் பெண்கள் விஷயத்தில் தகராறு ஏற்பட்டு பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு, இவரிடமிருந்து செல்போன் பறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.