பம்பை இசைக்கலை:
முத்தமிழில் இரண்டாம் தமிழாக இடம்பெற்றிருப்பது இசைக்கலை. இந்த இசைக்கலையில் பல்வேறு வகையான தாளங்களுடன் எண்ணற்ற கருவிகளைக் கொண்டு இசை உருவாக்கப்பட்டு கேட்போரையும் காண்போரையும் மகிழ்விக்கச் செய்கிறது. இதனை உணர்ந்து தமிழிசை என்ற ஒரு பட்டப்படிப்பையே தமிழ் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இசைக்கருவிகளில் எண்ணற்றவை இருந்தாலும், பம்பை இசைக்கருவி என்பது கேட்போரை தன்னிலை மறந்து ஆட செய்யுமளவுக்கு தட்டி எழுப்பும் வகையைச் சார்ந்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வகைகளில் பம்பை என்னும் இசைக்கருவி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் வெண்கலத்தாலான பம்பை பிரசித்தி பெற்றதாகும்.
இதே பம்பை தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மரத்தால் மட்டுமே செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா செய்த கொடுமையால் நொடிந்துபோன வாழ்வாதாரம்:
தற்போது கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பம்பை இசைக்கலைஞர்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலைமகள் பம்பை இசைக்குழுவை சேர்ந்த அமுல்நாதன் கூறுகையில்,
'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பம்பை இசைக் கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் 50 பேர் மட்டுமே அரசிடம் பதிவு செய்து உள்ளனர். பதிவு செய்யாத 250 பேரின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது. இந்தக் கரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நாங்கள் வாழ்வாதாரத்திற்கு வழயின்றி மிகவும் தவித்து வருகிறோம்.
இதையும் படிங்க... இசையால் செவி பசி தீர்த்தோர்- இன்று அவர்கள் பசிக்குத் தீர்வுதான் என்ன?
இந்த நேரத்தில் உலகமே முடங்கி இருப்பதால் நாங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு உணவில்லாமல் தவித்துவருகிறோம். அரசும், எங்கள் மீது பாராமுகமாக இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த முக்கியமான அரசு விழாக்கள் நடக்கும்பொழுது, எங்களைப்போன்ற பல்வேறு வகை இசைக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை அரசு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும்.
ஆனால் எங்களின் சாபமோ என்னமோ தற்போதைய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பம்பை இசை கலைஞர்களை அரசியல் கட்சிகள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி ஆகியவற்றில் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரு;ம அரசு இசைப்பள்ளியில் இது தொடர்பாக, எங்கள் பம்பை இசைக் கருவியை கற்றுக்கொடுக்க நாங்கள் அணுகியபோது, சரியான பாடத்திட்டம் இல்லை என்று அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அரசு கலைக் கல்லூரியை அணுகியபோது காத்திருங்கள் தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கிறோம் என்று கூறுகின்றனர். எங்கள் குடும்பத்தில் இருந்து நான்கு தலைமுறைகளாக இந்த பம்பை இசைக்கருவியைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்திவருகிறோம். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.
இதையும் படிங்க...'சாப்பாட்டிற்கே வழியில்லை; எங்க பொழப்பே போச்சு!' - ஊரடங்கால் தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்
எங்களுக்கும் உதவ வேண்டும்:
இந்த ஆறு மாதங்களில் பெறும் ஊதியத்தை கொண்டு, அடுத்த ஆறு மாதங்கள் எங்கள் குடும்பத்தை நடத்தமுடியும். எனவே தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில்கொண்டு பதிவு செய்யாத முடிதிருத்தும் ஏழை தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கியதுபோல், எங்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு இசைக் கலையை கற்றுக்கொடுக்க கோரிக்கை:
பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி பாடப் புத்தகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, அதிலும் குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பில் தனித் தமிழாக ஒரு பாடப்பிரிவு உள்ளது. அதுதான் சிறப்பு தமிழ். அந்த பாடநூலில் இசைக்கலை இடம் பெற்றுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு செய்முறை கல்வியாக எங்கள் இசைக் கருவியை கொண்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க... 'ஊரடங்கு தளர்த்தப்படலாம்... எங்களின் வாழ்வாதாரம்?' - கவலையில் நாதஸ்வர கலைஞர்கள்