கிருஷ்ணகிரி, தருமபுரி ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் 30 பால் உற்பத்தியாளர்களுக்கு 75 சதவீத மானியமாக ஆறு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்சாரம் மூலம் இயங்கும் புற்கள் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசுகையில், ''பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் பால் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் மொத்தமுள்ள 245 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு முதற்கட்டமாக மாவட்டத்திற்கு மின்சாரம் மூலமாக இயங்கும் 100 புற்கள் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் 70 இயந்திரங்கள் கால்நடைத் துறை மூலமாகவும், 30 இயந்திரங்கள் ஆவின் நிறுவனம் மூலமாகவும் வழங்கப்பட உள்ளன. மேலும் 200 கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுகவின் ஆட்சியில் சிறந்த பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அந்தத் திட்டங்களை பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.
தமிழ்நாட்டில் அதிமுக கட்சி தலைமையில்தான் கூட்டணி அமையும். கட்சிக்குள் எந்த ஒரு குழப்பமுமின்றி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 11 நபர்கள் கொண்ட வழிகாட்டு குழு கட்சிக்கு ஆலோசனை வழங்கவுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: தூர்வாராத பொதுப்பணித் துறை: அழுகிய நாற்றுடன் விவசாயிகள் போராட்டம்