கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தையடுத்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார்.
விழாவுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சசிகலாவை சேர்க்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கேள்வி எழவில்லை.
முடிந்த விஷயத்துக்கு தொடக்கப்புள்ளி
சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலரை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு நீக்கியுள்ளனர். எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை. முடிந்த விஷயத்திற்கு ஊடகங்கள் கமா போட்டு மீண்டும் தொடர்ந்து வருகின்றன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றிய பிறகு மீண்டும் மன்னிப்புக் கடிதம் கொடுத்தே இணைந்தார்.
அப்போது கட்சியில் எந்தத் தலையீடும் செய்ய மாட்டேன், அக்காவிற்கு சேவை செய்ய மட்டுமே விருப்பம் எனத் தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் தலையிடுவது சசிகலா அக்காவுடன் வியாபார ரீதியாக மட்டுமே உடனிருந்தார் என்பதையே காட்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்