கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று இரவு தேர்த்திருவிழா நடந்தது. அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜிம் மோகன், அக்கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கனியமுதன் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அழைத்துச் சென்று முன் வரிசையில் அமரவைத்து மரியாதை செய்துள்ளார். இதனால் ஊரில் உள்ளவர்களுக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு சென்ற ஜிம் மோகன் மற்றும் கூட்டாளிகள் பரசுராமன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையடுத்து ஜிம் மோகன், வெற்றிவேல் ஆகியோரை கைது செய்த சாமல்பட்டி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஜிம் மோகன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.