கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட பகுதி கெலமங்கலம். பேரூராட்சியாகவுள்ள கெலமங்கலத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மேல்நிலைப் பள்ளிகள், காவல் நிலையம், வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களுக்கு கெலமங்கலத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்கள் வந்துசெல்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் கெலமங்கலம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 38 சிசிடிவி கேமராக்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வீடியோ காட்சிகளைக் கண்காணிக்கும் வகையில், கெலமங்கலம் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இதனை இன்று (ஆகஸ்ட் 1) காலை கிருஷ்ணகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பணியில் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
100 காவலர்களின் கண்காணிப்புப் பணியை ஒரு சிசிடிவி கேமரா முடித்துவிடுகிறது. கெலமங்கலம் மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலுக்கு மக்களுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!