கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தின் எல்லையான அத்திப்பள்ளியில், கடந்த மாதம் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கர்நாடக பகுதியில் பட்டாசு கடைகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே உள்ள பட்டாசு கடைகளுக்கு, அம்மாநில மக்கள் வரிசையாக படையெடுத்து வருகின்றனர்.
மேலும், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பட்டாசு விலையைக் காட்டிலும், ஒசூர் பகுதிகளில் பட்டாசு விலை சற்று குறைவு எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வருடம் தமிழக அரசு சார்பில் 2 மணி நேரம் மட்டுமே வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், கர்நாடக பகுதி மக்கள் வருடம் வருடம் தமிழகத்திற்கு வந்துதான், தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கடைகளில் மட்டுமல்லாமல், சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.
இதையும் படிங்க: "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிக முக்கியமான விவகாரம்" - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
இந்த வருடம் புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால், அதனைச் சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பட்டாசுகளைப் பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுவதாக, பட்டாசுகளை வாங்க வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால், அவர்கள் அதிக அளவில் தள்ளுபடி கொடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வருவதால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இன்றி, தேசிய நெடுஞ்சாலை ஓரமும், சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதேபோல், கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், வருடம் ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்குப் பட்டாசுகளை வாங்க வருவதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மடப்புரம் காளி அம்மன் கோயில் உண்டியல் பணியின்போது 10 சவரன் தங்க நகை திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய செயல் அலுவலர்!