கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கும், மருவத்தூருக்கும் செல்வதற்கு தமிழ்நாட்டிற்கு வந்துசெல்கின்றனர். அவ்வாறு வந்த காரில் கர்நாடக மாநில கொடியை தமிழ்நாடு காவலர்கள் அகற்றியதாகவும், மருவத்தூரில் கர்நாடக மாநிலப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதனைக் கண்டித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளைச் சேரந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்திப்பள்ளியிலிருந்து கர்நாடக-தமிழ்நாடு மாநில எல்லையான ஜூஜூவாடி வரையிலும் போராட்டக்காரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தில் 420 என எழுதியவாறும், ஒரு கையில் ரோஜா பூவையும், மறு கையில் தடியை ஏந்தியவாறும் பேரணியாக வந்தனர்.
மாநில எல்லையில் தமிழ்நாடு பேருந்துகளை நிறுத்திய கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளிடம் இரு மாநிலங்களில் பிரச்னை ஏற்படாமலிருக்க அமைதி நிலவ வேண்டும் எனக் கூறி ரோஜா பூவை வழங்கினர். மற்றொரு கையில் தடியை வைத்திருந்தவாறு பிரச்னையை உண்டாக்க விரும்பினால் சண்டையிடவும் தயாராக இருப்பதாகவும் எச்சரித்தனர்.
பேரணியாக வந்த அனைவரும் கர்நாடக மாநில எல்லையில் அந்த மாநில காவலர்களால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால், மாநில எல்லையில் எந்தவித அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரண்டு மாநில காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'எங்கய்யா இங்க இருந்த பஸ் ஸ்டாப்ப காணோம்?' - அதிர்ச்சியில் மக்கள்