கிருஷ்ணகிரி மாவட்டம், தஞ்சூர் அருகே உள்ள சின்னபனமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை. இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். சொப்பன சுந்தரி என்ற பெயர் கொண்ட அந்த காளை மாடு, மாவட்டத்தில் நடந்த எருது விடும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ளது.
அதேபோல், பக்கத்து மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்த எருது விடும் விழாவிலும் பங்கேற்று முதல் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளது. 10 வயதுடைய இந்த காளை மாடு, இன்று காலை திடீரென்று இறந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இறந்து போன காளை மாட்டிற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து காளை மாட்டிற்கு ஊர் மக்கள் ஒன்று கூடி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். பல ஆண்டுகளாக எருது விடும் விழாவில் வெற்றிகளைக் குவித்த காளை மரணம் அடைந்ததால் கிருஷ்ணகிரி அருகே சின்ன பனமுட்லு கிராமமே சோகத்தில் மூழ்கியது.